தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைத்தது #DelhiGovt
டெல்லி முதலமைச்சர் அதிஷி அம்மாநில தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் அலுவலகம் செல்லக் கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனையடுத்து அவர் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார். இவரை தொடர்ந்து கோபால் ராய், கைலாஷ் கஹ்லோட், இம்ரான் ஹுசைன் , சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதையும் படியுங்கள் : பாலியல் வன்கொடுமை புகார் – #Malayalam நடிகர் எடவேல பாபு ஜாமினில் விடுவிப்பு!
டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், அதிஷி பல்வேறு வகை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவராக அறிவித்தார். அதன்படி, பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்கு ரூ.18,066 மாத ஊதியமும், பாதியளவு திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ. 19,929 மாத ஊதியமும், முழுமையான திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ. 21,917 மாத ஊதியமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து பேசிய அவர், நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதிய அளவை எடுத்துக்கொண்டு ஒப்பிட்டுப்பார்த்தால் டெல்லி அரவிந்த் கேஜரிவால் அரசு வழங்கும் குறைந்தபட்ச ஊதியம் அதிகம் என்பது தெரியும். ஏழை மக்களின் உழைப்புச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்லி மக்களுக்கு வரலாறு காணாத அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு வழங்குகிறது.
பாஜக ஏழை மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகிறது. இதனை இரு வழிகளில் நாம் பிரித்தறிய முடியும். 2016 - 2017 ல் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தலாம் என்ற அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசின் கோரிக்கைக்கு பாஜக முட்டுக்கட்டையிட்டது. பின்னர் நீதிமன்றத்தை நாடி, இதற்கான உத்தரவைப் பெற்று, குறைந்தபட்ச ஊதியத்தை கேஜரிவால் அரசு உயர்த்தியது. பாஜக இதனைக் கடுமையாக எதிர்த்தது. ஆனால், கேஜரிவால் அரசு கடுமையாகப் போராடி, சாமானிய மக்கள் நலனுக்கான இதனைக் கொண்டுவந்தது.
பாஜக ஆளும் மாநிலங்களில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதிய அளவை ஒப்பிட்டுப்பார்த்தால், அது டெல்லி அரசு வழங்கும் குறைந்தபட்ச ஊதியத்தின் பாதி மதிப்பே இருக்கும். பாஜக அரசு குறைந்த ஊதியத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், டெல்லி வழங்கும் ஊதியத்தின் அளவையும் குறைக்க முயற்சித்தது. ஆனால், டெல்லி மக்கள் நலனுக்காக குறைந்தபட்ச ஊதியத்தை கேஜரிவால் அரசு உயர்த்தியிருக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.