டெல்லி கலால் கொள்கை வழக்கு - கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சியான கவிதா தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கவிதா இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார்.
இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி காவேரி பட்வா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது” எனத் தெரிவித்து கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.