உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் குழுவுக்கு தலைமை தாங்கியவரின் வீட்டை டெல்லி வளர்ச்சி குழு அதிகாரிகள் நேற்று இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்தது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து 60 மீட்டர் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப் போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. துளையிடும் 25 டன் எடைக் கொண்ட ஆகர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது.
இதையும் படியுங்கள் : “திமுக அழிந்துபோகும் என்று சொன்னவர்கள் வரலாற்றில் காணாமல் போய்விட்டனர்” - டி.ஆர்.பாலு பதிலடி
அதிநவீன இயந்திரங்களும் மீட்புப் பணியில் தோல்வியுற்ற நிலையில், 17 நாள்கள் போராடி 'எலிவளை' சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள் 12 பேர் குழு 41 பேரை மீட்டனர். அந்த குழுவுக்கு வகீல் ஹாசன் தலைமை தாங்கினார்.
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் என்ற பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாக கூறி பல வீடுகளை டெல்லி வளர்ச்சி குழு அதிகாரிகள் பிப்-28 ஆம் தேதி காலை இடித்துள்ளனர். இதில், வகீல் ஹாசன் வீடும் ஒன்று என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வகீல் ஹாசன் கூறியதாவது:
"41 பேரை மீட்டதற்கு அரசு அளித்த பரிசு இது. வீடு இருக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு அரசிடம் முறையிட்டு எந்த பலனும் இல்லை. இன்று முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்துள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வீடு இடிப்பு சம்பவத்தின் போது வகீல் ஹாசனை போலீசார் தடுப்புக் காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. சுரங்க மீட்புப் பணியில் ஈடுபட்ட மற்றொரு வீரர் முன்னா குரேஷி, காவலர்கள் தங்களை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.