காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி - நவ.18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பள்ளிகளுக்கு நவம்பர் 18-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகள், அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பின்னர் நெல் வைக்கோல்களை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துக் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 421 ஆக பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நகர் முழுவதும் புகை மூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக, வாகனங்கள் ஓட்ட கடும் கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது. மேலும், அரசின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் - உச்சநீதிமன்றம்!
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் மாதத்தில் விடப்படும் குளிர்கால விடுமுறை முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 9-ம் தேதி முதல் நவம்பர் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.