#Delhi முதலமைச்சர் பதவி யாருக்கு? நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
ஆம் ஆத்மியின் விவகாரக் குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள அடுத்த முதலமைச்சர் யார் என்கிற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஆறு மாதங்களுக்கு பிறகு ஜாமீன் பெற்று செப்.13ம் தேதி வெளியே வந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் டெல்லி துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா மற்றும் பிற தலைவர்களை சந்தித்தார். இந்த சூழலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பதவி விலகவுள்ளதாக அறிவித்தார். அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதிவி விலகுவதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூடி, ஆலோசித்து புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “நான் நேர்மையானவன் என மக்கள் நினைத்தால் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்கட்டும்” என்றார். இந்த நிலையில், ஆம் ஆத்மியின் விவகாரக் குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் நாளை காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.