#Delhi | சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்!
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இல்லத்துக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த போது மூன்று முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இல்லத்துக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உருவப்படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.