For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

06:01 PM May 17, 2024 IST | Web Editor
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு   தீர்ப்பு ஒத்திவைப்பு
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Advertisement

டெல்லி அரசின் மதுபான கொள்கை  வழக்கில் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால பிணையில் தற்போது உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.  பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலுக்காக பிணையில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது அமலாக்கத்துறை தரப்பில், "டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் பெற்ற பணம் ஹவாலா பரிவர்த்தனை மூலம் கோவாவுக்கு எடுத்து செல்லப்பட்டது.  அந்த தொகை தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபித்துள்ளோம்.  குறிப்பாக கோவாவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பொறுப்பு வகித்த இரு நபர்களிடம் பணம் கொடுக்கப்பட்டது" என்று வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "எவ்வாறு எப்போது நிரூபித்தீர்கள்? மேலும் இதை நம்பும்படியாக ஒரு காரணத்தையும் தெரிவிக்கவில்லையே" என்று கேள்வி எழுப்பினர்.  நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்,  "இந்த விவகாரத்தில் பல்வேறு கூறுகளை கொண்டு சம்மந்தப்பட்ட நபர் தவறு செய்திருப்பார் என்று உறுதியாக நம்பினாலே,  அவரை கைது செய்து விசாரணை செய்யலாம்" என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள் "அப்படியெனில் யாரை வேண்டும் என்றாலும் கைது செய்யலாமே" என்று  கருத்து தெரிவித்தனர்.  இதனையடுத்து, அமலாக்கத்துறை தரப்பில் "ஆனால் இந்த விவகாரத்தில் எதிர் தரப்பினரிடம் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் இல்லையே" என்று வாதிட்டனர்.

தொடர்ந்து, நீதிபதிகள் "குற்றம் செய்துள்ளார் என்பதற்கான போதிய எந்த ஆதாரம் இல்லாமல் ஒரு விசாரணை அதிகாரி எவ்வாறு கைது நடவடிக்கையை எடுக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினர்.  பின்னர்,  "குற்றவியல் சட்டத்துக்கும், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்துக்கும் வேறுபாடு உள்ளது" என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்,  "இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பல்வேறு கதைகளை புனைகிறார்கள்.  முதலில் 100 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறினர்.  ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை.  இதனையடுத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.  ஆனால் குற்றம் நடைபெற்றதற்காக சாத்தியக்கூறு இருப்பதாக கூறினர்" என்று வாதிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதத்துக்கு பதிலளித்த நீதிபதிகள், "சட்டத்துக்கு கைதுக்கான அடிப்படை காரணம் என்ன என்பதே தேவையே தவிர, குற்றம் நடந்ததாக நம்பப்படுகிறது என்ற காரணம் தேவையில்லை. இந்த இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன" என்றனர்.

இதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்,  "இந்த ஆதாரம் இருப்பதால் தான் கைது செய்தோம் என கூற அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை.  ஏற்கனவே சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் எழுத்துப்பூர்வ வாதத்தில் பல குளறுபடிகள் உள்ளன.  மேலும், வழக்கில் ஒரு நபருக்கு எதிராக ஒரு ஆதாரம் உள்ளது என கூறினாலே சம்மந்தப்பட்டவரை கைது செய்யலாம் என்று சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டம் பிரிவு 19ல் உள்ளது.  இது மாற்றப்பட வேண்டும்.

சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டம் பிரிவு 19ஐ ரத்து செய்ய வேண்டும்.  அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி வழக்கை உரிய முறையில் கவனிக்க தவறிவிட்டார்.  ஏனெனில் பல்வேறு பழைய ஆதாரங்கள் எனக் கூறப்படுபவற்றை வைத்து தான் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்" என்று வாதிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.  அதேநேரம் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்படி வழக்கமான ஜாமீன்கோரி உரிய விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement