#Delhi-ஐ நடுங்க வைத்த 12ம் வகுப்பு மாணவர்... அதிரடி கைது!
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 12ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. உடனடியாக போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டறியப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில், டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், "பள்ளி வளாகங்களில் பல்வேறு இடங்களில் பயங்கரமான வெடிகுண்டு உள்ளது. தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் இருப்பர். மற்ற ஆசிரியர்களும் அதிகாரிகளும் பள்ளியைச் சுற்றி வருவர். இதனால் இழப்பு அதிகமாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவருக்கு தேர்வு அட்டவணை குறித்தும் ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் எவ்வாறு தெரிந்திருந்தது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 12 ஆம் வகுப்பு மாணவர் என்பது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு பயத்தால் மிரட்டல் விடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.