டெல்லி காற்று மாசுபாடு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்...!
டெல்லியில் காற்று மாசுபாடு என்பது நீண்டகால பிரச்சனையாக உள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில் இன்று டெல்லி காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி. கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் சில எம்.பி.க்கள் முகமூடிகளை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு; இளம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள், என்னைப் போன்ற முதியவர்களுக்கும் இது கடினம்” என்றார்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியும், ”எதிர்க்கட்சி இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்போது மத்திய அரசுடன் துணை நிற்கும். நிலைமை ஆண்டுதோறும் மோசமடைந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன; எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கூறியுள்ளோம், நாங்கள் அனைவரும் அவர்களுடன் நிற்கிறோம். இது ஒருவருக்கொருவர் விரல் நீட்டிக் காட்டும் அரசியல் பிரச்சினை அல்ல” என்றார்.