அம்பேத்கர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக மத்தியப்பிரதேசத்தின் மோவ் கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவப் போர்க் கல்லூரிக்கு சென்றுள்ளார். இன்று பிற்பகல் மோவ் கன்டோன்மென்ட் சென்ற அவரை ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வரவேற்றார். அதைத்தொடர்ந்து, மோவ் கன்டோன்மென்ட்டில் அதிகாரிகள் மற்றும் வீரர்களிடம் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார்.
தொடர்ந்து மோவ் கன்டோன்மென்ட்டின் காளி பால்டன் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் அஸ்திகலஷத்தை (சாம்பலை) ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார் என்று அம்பேத்கர் நினைவு சங்கத்தின் செயலர் ராஜேஷ் வான்கடே தெரிவித்தார். நினைவிட கட்டடத்தின் முதல் தளத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங், அம்பேத்கரின் வாழ்க்கையை சித்தரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை பார்வையிட்டார் என்று வான்கடே கூறினார்.