என்னை வைத்து DeepFake வீடியோ.. மிகவும் கவலை அளிக்கிறது.. - பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி, கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானதையடுத்து, இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் DeepFake என்ற செயலி. இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும். இதை பயன்படுத்தி ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். சமீபத்தில் கூட தமிழ் பாடல்களை பிரதமர் மோடியின் குரலில் மாற்றி அதனை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வந்தன.
அண்மையில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் முகங்களை வேறு சிலரின் முகங்களோடு பொருத்தி வெளியிடப்பட்ட மிக மோசமான போலி வீடியோக்கள் (டீப்ஃபேக் வீடியோ) சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகைகள் இது குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடுவதாக சமீபத்தில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இது குறித்து சாட்ஜிபிடி குழுவினருடன் பேசி, எச்சரித்துள்ளேன். செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.