"சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சபரிமலை யாத்திரையின் மண்டல பூஜை இரண்டாம் நாளான இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது.
ஆன்மிகப் பயணங்களில் மனித உயிர்கள் பாதிக்கப்படுவது எந்த காரணங்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பக்தர்கள் அதிகம் திரள்வது முன்கூட்டியே அறிந்த நிலையிலும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பது இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
பக்தர்கள் அனைவரும் அமைதியாக, அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி, நெரிசலை தவிர்த்து பாதுகாப்புடன் தரிசனம் மேற்கொள்ள வேண்டுகிறேன். யாத்திரை காலங்களில் கூட்ட மேலாண்மை, மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒன்றியமும், மாநில அரசும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம். மனித உயிர் பாதுகாப்பில் எந்த வித அலட்சியமும் இடம் பெறக்கூடாது. உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.