ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை சரிவு! அக்னிபத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை!
இந்திய ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதால், ‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படும் வீரா்களின் விகிதத்தை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் பதினேழரை வயது முதல் 21 வயது வரை உள்ளவா்கள் 4 ஆண்டுகளுக்கு ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளில் சோ்க்கப்படுவா். அவ்வாறு ஆண்டுதோறும் சோ்க்கப்படுபர்களில் 25% போ் மட்டும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் 4 ஆண்டுகால ஒப்பந்தம் முடிந்த பிறகும் முப்படைகளில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவா்.
மற்றவர்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்படுவா். இந்தத் திட்டத்தை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன. இதனிடையே, ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ராணுவ வீரா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படும் வீரா்களின் விகிதத்தை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.