மகாராஷ்டிராவில் அடுத்த முதலமைச்சர் யார்? மகாயுதி கூட்டணியில் தொடரும் இழுபறி!
மகாராஷ்டிரா தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக மட்டும் 132 தொகுதிகளிலும், சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி வெறும் 46 இடங்களில் மட்டுமே வென்று தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக தற்போது முதலமைச்சராக உள்ள ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சராக நீடிப்பாரா அல்லது தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள் : அரசியல் சாசன தினம் | இன்று உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை!
ஏக்நாத் ஷிண்டேவும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயராக இல்லை என்று சொல்லப்படுகிறது. பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராயாக வேண்டும் என உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், முதலமைச்சர் விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலுக்கு நடுவே, தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்றுள்ளார்.