“வீதிகளை மீறியதால் டிக்டாக் செயலி மீது நடவடிக்கை!” - இந்தோனேஷிய அரசு!
சமூக வலைதளங்களில் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி வரும் டிக்டாக் செயலியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பொருள்கள் விற்கப்படுவதை இந்தோனேஷிய அரசு தடை செய்துள்ளது. பயனர்களின் தகவல் பாதுகாப்பு கருதியும், சிறு விற்பனையாளர்களின் நலன் கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தோனேஷியாவின் இந்த விதியை டிக்டாக் தொடர்ந்து மீறி வருவதாக இந்தோனேசிய சிறு, குறு தொழில் துறை அமைச்சர் டெடென் மஸ்டுகி தெரிவித்துள்ளார்.
மேலும் டிக்டாக் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவதால் செயலியின் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். டிக்டாக் அறிமுகப்படுத்திய டிக்டாக் ஷாப் என்கிற இணைய விற்பனை சேவையும் கடந்த ஆண்டு முடக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்தோனேஷியாவின் மிகப்பெரிய இணைய விற்பனை நிறுவனமான டோகோபிடியாவின் 75.01 சதவிகித பங்குகளை டிக்டாக்கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ், டிசம்பரில் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.