கடன் சுமை | உயிரை மாய்த்துக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்!
மண்ணச்சநல்லூரில் கடன் சுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). இவர் அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா (32). இந்த தம்பதிக்கு கோகுல்நாத் (14) என்ற மகனும், சாய் நந்தினி (11) என்ற மகளும் இருந்தனர். கோகுல்நாத் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியம் 9-ம் வகுப்பும், சாய் நந்தினி மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கிருஷ்ணமூர்த்திக்கு கடன் சுமை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு அரிசி ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி கீர்த்திகா, மகன் கோகுல்நாத், மகள் சாய் நந்தினி ஆகிய மூவரும் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் சுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.