ஓசூரில் அருகே மூதாட்டி மர்ம மரணம்... போலீசார் விசாரணை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அட்டகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிச்சந்திரப்பா. இவருக்கு சொந்தமான வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு தீ காயங்களுடன் மூதாட்டி ஒருவர் கிடந்தார்.
தொடர்ந்து, அவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டி தீக்காயத்தால் உயிரிழந்தார் என்று நம்பப்பட்ட வேளையில், மூதாட்டியின் கழுத்து வெட்டுக்காயம் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் ஓசூர் அருகே ஒன்னல்வாடி என்னும் கிராமத்தில் முதியவர்கள் இருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டின் அறைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அந்த சம்பவத்தில் இருந்து போலிசாருக்கு இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில், தற்போது அதே பாணியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.