“கொலை மிரட்டல்... ‘Emergency’ படத்திற்கு தணிக்கை வழங்கப்படவில்லை” - நடிகை கங்கனா ரனாவத் தகவல்!
‘எமர்ஜென்சி’ திரைப்படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை என பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து பாஜக எம்பியாக உள்ளவர்தான் கங்கனா ரனாவத். மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியல் வருகைக்கு பின் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் எமர்ஜென்சி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய 21 மாத அவசரநிலையை மையமாக வைத்து உருவாகும் படம்தான் ‘எமர்ஜென்சி’. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்.6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதன் டீசர் கடந்த 14ஆம் தேதி வெளியானது. ஆனால் இதுவரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தை தணிக்கை செய்யாமல் மிரட்டுவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
எங்களது படமான எமர்ஜென்சிக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக வதந்திகள் வருகின்றன. இது உண்மையில்லை. எங்களது படம் தணிக்கை முடிந்துவிட்டது. ஆனால், அதற்கான சான்றிதழ் வழங்கவில்லை. ஏனெனில் பல கொலை மிரட்டல்கள் வருகின்றன. படத்தின் தணிக்கை வாரிய உறுப்பினர்களும் மிரட்டப்படுகிறார்கள். இந்திரா காந்தியை கொலை செய்ததை, பிந்தர்வாலேவை காட்டக்கூடாது, பஞ்சாப் கலவரங்களை காட்டக்கூடாதென்றும் நாங்கள் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
இதைத் தவிர்த்துவிட்டு வேறு எதைக் காட்டுவதென எங்களுக்கு தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாட்டின் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.