DC vs KKR | டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 48வது லீக் போட்டியில் கொல்கத்தா - டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் அடித்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்களும், ரிங்கு சிங் 36 ரன்களும் அடித்தனர்.
டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், நிகம் தலா 2 விக்கெட்டுகளும், சமீரா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அதன்படி, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடி ரன்களை குவித்த பிளெஸ்சிஸ் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களம் கண்டவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். கருண் நாயர் 15 ரன்களிலும், கே.எல். ராகுல் 7 ரன்களிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும், அஷுதோஷ் சர்மா 7 ரன்களிலும், ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். தொடர்ந்து, இறங்கிய கேப்டன் அக்சர் பட்டேல் 43 ரன்களிலும், நிகாம் 38 ரன்களிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டெல்லி அணியின் சமீரா 2 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ,