“POCSO குற்றங்கள் நடைபெறாதவாறு பள்ளிகளை கண்காணிக்க வேண்டும்” - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் #Madhumathi அறிவுறுத்தல்!
போக்சோ குற்றங்கள் நடைபெறா வண்ணம் பள்ளிகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி தெரிவித்தார்.
சென்னை, பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று (செப்.27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா மற்றும் இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி பேசியதாவது,
"அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆதார் பதிவு பணிகளை விரைவுபடுத்தி வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்திட வேண்டும். வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக துவங்கப்படும் சேமிப்பு கணக்கு பணிகளை கண்காணித்து விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும். பள்ளிகளில் பயனற்ற நிலையிலுள்ள பழைய கட்டடங்களை எஸ்.எம்.சி. மூலம் தீர்மானம் நிறைவேற்றி பொதுப்பணித்துறை மூலம் அவற்றை உடனடியாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காலாண்டு விடுமுறை துவங்க உள்ள நிலையில் பள்ளி வளாகத்திலுள்ள செடிக்கொடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு நீண்ட காலமாக விடுப்பிலுள்ள மாணவர்களை கண்காணித்தல் வேண்டும். மேலும் இடைநின்ற பெண் குழந்தைகள், குழந்தை திருமணத்திற்கு தள்ளப்படவும், குழந்தை தொழிலாளர்களாக மாறிவிடவும் வாய்ப்பு அதிகம் உள்ளதை மனதில் கொண்டு இதில் தனிகவனம் செலுத்தி அக்குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போக்சோ போன்ற குற்றங்கள் நடைபெறா வண்ணம் பள்ளிகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இதனை முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் பாடத்திட்டங்களை நிர்ணயம் செய்யப்பட்ட கால அவகாசத்தில் நடத்தி முடிப்பதை உறுதி செய்ய வேண்டும். உரிய திருப்புதல் தேர்வுகள் நடத்தி, வருகின்ற பொதுத்தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்."
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி தெரிவித்தார்.