வயநாட்டில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ராகுல் காந்திக்கு காயிதே மில்லத் பேரன் கடிதம்!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கேரள மாநில வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பின் (NFWI) பொதுச்செயலாளருமான ஆனி ராஜாவை எதிர்த்து தாங்கள் போட்டியிட முடிவெடுத்துள்ளது பெரிதும் ஏமாற்றமளிக்கிறது. கேரள மாநிலத்தின் முன்னணி கூட்டணிகளான LDF மற்றும் UDF அணிகள் தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணியின் இரு பெரும் தூண்கள் என்பதை மறுக்க இயலாது.
இடதுசாரி கட்சிகள் பாஜகவின் கொள்கை மற்றும் செயல்முறைகளை நேரடியாக எதிர்ப்பதிலும் நேர்மையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஜனநாயக ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தேசிய அளவிலான கூட்டணியில் முதன்மை கட்சியான காங்கிரஸின் முன்னணி தலைவரான தாங்கள் பாதுகாப்பான வெற்றி பெறுவதற்கு பல தொகுதிகள் உள்ளன.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவரான காயிதே மில்லத்தின் பேரனாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மலபார் வாக்காளர்களை நன்கு அறிந்திருக்கும் நிலையில் இம்முறை இடதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவாக குறிப்பாக முஸ்லிம்கள் அப்பகுதியில் வாக்களிப்பார்கள் என்பதை நன்கு உணர முடிகிறது.
ஆகையால் கேரளத்தில் போட்டியிடுவதை தவிர்த்து தமிழ்நாட்டில் வேறு தொகுதியில் போட்டியிட்டால் தங்களின் மிகப் பெரிய வெற்றியை நாம் உறுதி செய்ய இயலும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.