தவெக 2வது மாநாட்டின் தேதி அறிவிப்பு - மதுரைக்கு படையெடுக்கும் தொண்டர்கள்!
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் இந்த மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல்துறை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும். எனவே, மாநாட்டுக்கான தேதியை மாற்றியமைக்கும்படி காவல்துறை தரப்பில் தவெகவிடம் கோரப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட தவெக, ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரையிலான நாட்களில் ஒரு தேதியைத் தேர்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 21 ஆம் தேதியை மாநாட்டுக்கான புதிய தேதியாக விஜய் அறிவித்துள்ளார்.
மதுரை, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாக இருந்து வருகிறது. இங்கு மாநாடு நடத்துவதன் மூலம், தவெக தனது அரசியல் அடித்தளத்தை தென் மாவட்டங்களில் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாடு தவெகவின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.