“அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” - அமைச்சர் #ThangamThenarasu!
அணைகளின் நீர்திறப்பு குறித்த விவரங்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி மாவட்ட எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும், ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாத வண்ணம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்று பல்வேறு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. பருவமழை இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால், கன்னியாகுமரி ஆற்றங்கரை ஓரம் குறிப்பாக குழித்துறை, பழைய தேங்காய்
பட்டணம் பகுதிகளில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல்
இருக்க மின் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் சீரமைக்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் மாதங்களில் மீட்பு நடவடிக்கைகள் முழுவதுமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அணைகளின் இருப்பு நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறக்கப்படுகிறது என்பது குறித்து முன்னரே மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.