அமலுக்கு வந்தது சிலிண்டர் விலை உயர்வு... இனி எவ்வளவு தெரியுமா?
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை போன்றவைகள் நிர்ணயிக்கப்படும். கடந்த சில மாதங்களாகவே வர்த்தக சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் விலை குறைந்தது. அதே சமயத்தில் கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே, வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ 50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருந்தது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (ஏப்.8) முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில் 14 கிலோ எடை கொண்ட ஒரு மானிய விலை சிலிண்டரின் விலை ரூ 803 லிருந்து ரூ 853 ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.2 உயர்த்தி மத்திய அரசு நேற்றைய தினம் அறிவித்திருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு கலால் வரியை உயர்த்திவிட்டது. இதேபோல், சிலிண்டர் விலையையும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.