#CycloneFengal | 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அநேக இடங்களில் பெய்து வந்த மழையின் தாக்கமும் குறைந்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி, இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தூரத்திலும், சென்னை தென் கிழக்கே 490 கி.மீ. தூரத்திலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கரையோரமாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு 'பெங்கல்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (நவ.30) தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று (நவ.28) முதல் வரும் 2-ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.