இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்!
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலை முதல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது;
ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இன்று காலை 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 97 மில்லி மீட்டர், மகாபலிபுரத்தில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பருவ மழை டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும்” என்று தெரிவித்தார்.