ரூ.100 கோடியுடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளர் - ஆத்தூரில் முதலீட்டாளர்கள் திடீர் போராட்டம்...
100 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான நகை கடையின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி, பூட்டியிருந்த கடையை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் வலசையூர் கிராமம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த வேலு - விஜயா தம்பதியின் மகன் சபரிசங்கர். இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக எஸ்.வி.எஸ். ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். இந்த கடையை தலைமையிடமாகக் கொண்டு தற்போது சேலம், நாமக்கல், திருச்சி, கோவை, தர்மபுரி, கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 11 கிளைகளும், 119 வாடிக்கையாளர் சேவை மையமும் துவங்கி நடத்தி வந்தார்.
இந்த நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் நகை தரும் திட்டம், பழைய நகைக்கு புதிய நகை தரும் திட்டம், பணம் முதலீடு செய்தால், மாதம் தோறும் இரண்டு ரூபாய் வட்டி தருவதாக கவர்ச்சி கரமான திட்டதை அறிவித்தார். இதனை நம்பி ஏராளமான மக்கள் நகை திட்டத்தில் சேர்ந்து பணத்தை செலுத்தினர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அனைத்து கடைகளையும் திடீரென மூடிவிட்டு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்துடன் தலைமறைவானார்.
சீட்டு போட்டவர்கள், நகை எடுக்க வந்தவர்கள் நகை கடைப் பூட்டப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடை ஊழியர்கள் கொடுத்த புகாரின்பேரில் சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் சபரிசங்கரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் தலைமறைவான நகை கடையின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தியும், வாடிக்கையாளர்கள் செலுத்திய சிறு சேமிப்புத் தொகை, நகை, முதலீடு டெபாசிட் பணத்தை திரும்ப வழங்கக்கோரி பூட்டியிருந்த நகை கடையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்ப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.