”நடப்பாண்டில் 251 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!” - மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்!
நடப்பாண்டில் மட்டும் இலங்கை கடற்படை 251 தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் கடற்படை 7 தமிழக மீனவர்களையும் கைது செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்து மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங்,
“2024 நடப்பாண்டில் 269 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும், அதில் 251 பேர் தமிழக மீனவர்கள், 14 பேர் புதுச்சேரி மீனவர்கள், தலா 2 பேர் ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை நடப்பாண்டில் கைது செய்யப்பட்டதில், 183 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் நடப்பாண்டில் வங்காளதேச கடற்படையால் இந்திய மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் கடற்படையால் 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 7 பேர் தமிழக மீனவர்கள், 6 பேர் மேற்கு வங்க மீனவர்கள் ஒருவர் ஒடிசாவை சேர்ந்தவர் எனவும், மீதமுள்ள 5 மீனவர்கள் குறித்தான தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை எனவும் மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.