IPL CSKvsGT - கிரிக்கெட் ரசிகர்களுக்காக கூடுதல் நேரம் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
ஐபிஎல் தொடரை முன்னிட்டு நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, நாளை இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 1 மணிவரை (27-03-2024-1.00 AM) ரயில்கள் இயக்கப்படும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும்.
மேலும், போட்டிக்குப் பிறகு அரசினர் தோட்டம், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் மேலும் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைனில் (CMRL mobile App, Paytm app, Phonepe app, WhatsApp, ONDC etc ) பயணச்சீட்டை பெறலாம் அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம். மேலும், பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50/ செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் வெளியேறலாம்.
இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்து கொள்கிறது. மேலும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.