கோவையில் ஆன்லைனில் வேலை என கோடிக்கணக்கான ரூபாய் மோசடி! சைபர் கிரைம் போலீஸில் புகார்!
கோவையில் ஆன்லைனில் வேலை என தனியார் செயலி மூலம் பண முதலீடு செய்ய வைத்து, கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தவர்களை கைது செய்து வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தனியார் செயலி மூலமாக முதலீடு செய்து, அவர்கள் அளிக்கும் சிறுசிறு பணிகளை செய்தால் வாரந்தோறும் தொகை வழங்கப்படும் என கோவை, மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி பலரும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.3.50 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, வாரந்தோறும் அவர்கள் அளித்த பணிகளின் அடிப்படையில் முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த மக்கள் பலரும் இந்த செயலியில் முதலீடு செய்து அவர்கள் அளித்த பணியை செய்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக பணிக்கான தொகை வராததால்
மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இதைத் தொடர்ந்து, முதலீடு செய்து ஏமாந்த 100-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். இந்த செயலி மூலமாக தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பலரையும் முதலீடு செய்யவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. மோசடி செய்தவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.