நீர் இருந்தும் கருகும் பயிர்கள்: விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!
மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள், உடனடியாக பயிர்களைக் காப்பாற்ற தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1,60,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீரை நம்பி சாகுபடியைத் தொடங்கினர்.
இருப்பினும், வடிகால்களை முறையாக தூர்வாராதது மற்றும் உரிய முறையில் கணக்கீடு செய்து வைத்து நீர் வழங்காதது போன்ற காரணங்களால், மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, பாண்டவை ஆறு பாசனப் பகுதிகளில் உள்ள கூடூர், சேந்தனாங்குடி, கீழ கூத்தங்குடி, தென்னவராயநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையால் உரம் இட முடியாமலும், களை எடுக்க முடியாமலும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தண்ணீர் தேவை உள்ள டெல்டா மாவட்டங்களுக்குப் பகிர்ந்து அளிக்காமல், கடலுக்குத் தண்ணீரைத் திருப்பி விடும் நிலை ஏற்படுவது அரசு அதிகாரிகளின் கவனக்குறைவு என்றும், அவர்களை மாற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர்வரத்து இருந்து, அதே அளவு தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், திருவாரூர் அருகே உள்ள கூடூர், பெருங்குடி, புலிவலம் போன்ற பகுதிகளில் இதுவரை நீர் கிடைக்காததால், குறுவை சாகுபடியைக் கைவிடும் அவலமும் வந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்ட பின்னரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டாலும், அலட்சியத்தாலும் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக முறை வைக்காமல் ஆறுகளில் நீர் வழங்கினால் மட்டுமே எஞ்சியிருக்கும் நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.