“பெரியார் விமர்சிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது” - திருமாவளவன்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மறைந்த விசிக நிர்வாகியின் படத்திறப்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது,
“இன்றைக்கு தந்தை பெரியாரைப் பற்றி கொச்சையாக விமர்சனம் செய்பவர்கள் தமிழ்நாட்டில் முளைத்துள்ளார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலமாகவே அம்பலமாகியுள்ளது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அவரை வீழ்த்த வேண்டும் என்று யார் முயற்சித்தார்கள் என்பதை நாடு அறியும், நாமும் அறிவோம்.
அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்று போய் வீழ்ந்தார்களே தவிர, பெரியாரை வீழ்த்த முடியவில்லை. திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. விசிகவுக்கும் அவர்தான் வழிகாட்டி. கொள்கையாசான். ஆகவே நாம் பெரியாரை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் என வேடிக்கை பார்க்க முடியாது. பெரியாரையே அந்நியர் என சொல்பவர்கள் அம்பேத்கரை அந்நியர் என சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.
பெரியார் தமிழர் இல்லை, தமிழ் தேசத்தின் பகைவர் என்று சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அனுமதித்தால் அம்பேத்கரை மராட்டியர் என சொல்லி அந்நியப்படுத்துவார்கள். இது அரைவேக்கட்டுத்தனமான அரசியல். அற்பத்தனமான அரசியல். இனவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கும் ஒரு முயற்சி. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஆளும் கட்சியாக, ஆண்ட கட்சியாக இருந்ததால், நாம் இறங்கி போய் பதில் சொல்ல தேவையில்லை என அமைதி காக்கலாம். ஆனால் விசிக அப்படி வேடிக்கை பார்க்க முடியாது.
நம்முடைய கொள்கை அடையாளங்களை சிதைக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாத்தாக வேண்டும். மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தது இந்த நாட்டிற்கு கேடு. எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற கவலை மேலோங்குகிறது. இந்த தேசத்தை என்ன செய்யப் போகிறார்கள் என்ற கவலை மிஞ்சுகிறது. மோடியை எப்படியாவது இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று பெரும் முயற்சி மேற்கொண்டோம்.
அகில இந்திய அளவில் 28 கட்சிகளை ஒன்றிணைத்து, இந்திய கூட்டணி என ஒருங்கிணைத்தோம். இதில் விசிகவுக்கும் பங்கு உண்டு. ஆனாலும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. எப்படி இன்னும் ஐந்தாண்டு காலம் தாக்குபிடிக்கப் போகிறோம் என தெரியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை நாளுக்கு நாள் நீர்த்துப் போக செய்கிற வேலையில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறுபான்மையினருக்கான தனி சட்டத்தை சீர்குலைக்க, வக்ஃபு வாரியத்தை ஆக்கிரமிக்க, புதிதாக ஒரு சட்டத்தை அடாவடித்தனமாக கொண்டு
வருகிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமல்ல,
இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடிய ஒரு அரசு பாஜக அரசு, மோடி அரசு. இதனை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாளை வக்ஃபு வாரிய சட்டத்தை மீண்டும் அமல்படுத்த போகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, நாளை நானும், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் நாடாளுமன்றம் செல்கிறோம். இப்படியான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும், பாஜகவுக்கு பாடம் புகட்டவும் திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த கூட்டணியை சிதறடிக்க என்னென்னவோ முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டார்கள். அந்த
சதிகளை எல்லாம் முறியடித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி” எனப் பேசினார்.