ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை தகவல்!
ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி நடந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்சிபி) மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, கடந்த ஏப். 9-ம் தேதி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சாந்தோமில் உள்ள அவரது வீடு, சென்னை சாஸ்திரி நகரில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகம், சென்னை பெரம்பூரில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய 3 பேரின் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் என்று சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர, மதுரை, திருச்சி என ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அன்றைய தினம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ED, Chennai has conducted search operations on 9/4/2024, under the PMLA, 2002 at various locations in Chennai, Madurai, and Tiruchirappalli at the residences and businesses premises belonging to AR Jaffer Sadiq and others. During the search operations, various incriminating…
— ED (@dir_ed) April 13, 2024
இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “9/4/2024 அன்று சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று பதிவிடப்பட்டுள்ளது.