கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு டிஎஸ்பி பதவி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி சர்மா. 26 வயதாகும் தீப்தி ஷர்மா இந்திய அணியின் ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் 100 விக்கேட் வீழ்த்திய ஒன்பதாவது இந்தியர் என்ற சாதனையையும் சமீபத்தில் தீப்தி ஷர்மா படைத்தார்.
டிசம்பர் 2023-ல் ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி ஷர்மாக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமித்துள்ளது.
இதற்கான ஆணையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வழங்கினார். கூடவே, தீப்திக்கு விருது மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கியும் கவுரவித்தார். இதன்மூலம் தீப்தி சர்மாவின் சிறுவயது கனவு நனவாகியது.
உத்தரபிரதேசத்தில் அவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சீருடை வழங்கப்பட்டது. இந்த பதவிக்காக உத்தரபிரதேச அரசுக்கு தீப்தி ஷர்மா நன்றி கூறினார். மேலும் இதற்காக நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் எனவும் அவர் கூறினார்.