“கப்பு முக்கியம் பிகிலு”.... | உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி | இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை நடத்துகின்றன.
13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. தோல்வியே காணாமல் 10 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிய இந்திய அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த தொடரில், 8 ஆட்டங்களில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் பலப்பரிட்சை நடத்த தயாராகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதிப்போட்டியை காண உள்ளனர். இவர்களது ஆர்ப்பரிப்பும் ஆதரவும் இந்திய அணிக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்.
இறுதிப் போட்டியையொட்டி, அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்களை கவர லேசர் ஷோ, ட்ரோன் சாகசம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இசை, நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டியை அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் கண்டுகளிக்க உள்ளனர். பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் கண்டுரசிக்கின்றனர்.
இறுதிப்போட்டியில் களமிறங்கும் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், முகமது ஷமி உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே, இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும். தொடர்ந்து வெற்றிவாகை சூடிவரும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.