அரசுப் பள்ளிக்கு உதவ தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய அசத்தல் "உணவுத் திருவிழா" - எங்கே நடந்தது?
அரசு பள்ளிக்கு உதவிடும் வகையில் தனியார் பள்ளியில் மாணவர்களே நடத்திய உணவு திருவிழா அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களோ அல்லது அப்பள்ளியில் படித்து உயர்ந்த இடத்தில் இருக்கும் அதிகாரிகளோதான் தாங்கள் படித்த பள்ளியை மறவாமல் அந்த பள்ளிக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அல்லது பள்ளிக்குத் தேவையான கல்வி சார்ந்த உபகரணங்களை வழங்குவர். அதேபோல பள்ளியில் படித்த மாணவர்கள் தங்களது பள்ளியை தரம் உயர்த்த அனைத்து ஏற்பாடுகளை செய்யும் செய்திகளை சினிமாவில் மட்டும் அல்லாது நிஜ வாழ்க்கையிலும் நாம் பார்த்திருக்கிறோம்.
அதேபோல குறிப்பிட்ட அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்களது ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் துணையுடன் தங்களால் இயன்ற நிதியுதவிகள், அரசிடம் கோரிக்கைகள், பள்ளியை நவீனப்படுத்துதல் போன்ற பணிகளை செய்யும் செய்திகளைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் உணவுத் திருவிழா ஒன்றை நடத்தி அதில் வரும் வருமானத்தை அரசு பள்ளிகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ள செய்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கிளாம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் பள்ளி ஸ்ரத்தா சில்ட்ரெண்ட்ஸ் அகாடமி. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை தொழில்முனைவராக்கும் வகையில், பள்ளி மாணவர்களே வீட்டில் தயாரித்த பொருட்களை கண்காட்சி படுத்தி விற்பனை செய்யும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் உணவு பொருட்கள் மட்டுமின்றி அழகுசாதன பொருட்கள், மெகந்தி, விளையாட்டு பொருட்கள், நடனம் , இசை , பாடல் என கிராமத்து திருவிழா போல் பல நிகழ்ச்சிகள் இந்த உணவுத் திருவிழாவில் நடைபெற்றது. இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்திருந்தனர்.
இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு மாணவர்களின் தாயாரிப்புகளை வாங்கிச் சென்றனர். இந்த கண்காட்சி மூலம் கிடைக்கும் வருவாய் அரசு பள்ளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் எனவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.