“சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்...!” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!
நீதித்துறையின் முடிவுகள் மீது சில குழுக்கள் அழுத்தம் கொடுப்பதாக, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உட்பட 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், சில கந்து வட்டிக் குழுக்கள் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளின்மீது அழுத்தம் கொடுப்பதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அரசியல் வழக்குகளில், குறிப்பாக அரசியல்வாதிகள் தொடர்புடையை ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களின் தீர்ப்பின்மீது அழுத்தம் கொடுப்பதை காணலாம் என்றும், அவர்களது இந்த யுக்தி நீதிமன்றங்களை பாதிப்பதோடு, ஜனநாயகத் தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதித்துறை பற்றிய தவறான தகவல்களை பரப்பி, நீதிமன்றங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்க சில குழுக்கள் முயற்சிப்பதாகவும், தங்களது கடிதத்தில் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றங்களுக்கு உள்ளேயும், ஊடகங்களின் வாயிலாகவும் நீதித்துறையை விமர்சிப்பதாகவும் வழக்கறிஞர்கள் எழுதிய கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில குழுக்கள் தங்களது வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட முயற்சிப்பதாகவும், தங்களுக்கு சாதமான தீர்ப்பு வழங்கும்படி நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார் - தொடரும் சிக்கல்!
இவ்வாறு செய்வது நீதித்துறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது என்று குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர்கள், இந்த விவகாரத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் சந்திரசூட் விரைந்து நடவடிக்கை எடுத்து, நீதித்துறையை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.