அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!
மார்ச் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபானக்கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, ரூ.1000 கோடி ஊழல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து CBI, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம்ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அவரை நேரில் ஆஜாராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியது. தேர்தல் நெருங்கும் வேளையில் தன்னை கைது செய்ய பாஜக திட்டமிடுவதாகவும், பாஜகவில் இணைவது - சிறைக்குச் செல்வது என்பதைத் தவிர எதிர்கட்சியினருக்கு வேறு வழியில்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இறுதியாக 8வது சம்மன் வரை அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. கடைசியாக 4ஆம் தேதி அனுப்பப்பட்ட 8ஆவது சம்மனுக்கு, ’12ஆம் தேதிக்கு மேல் பதிலளிக்கிறேன்’ எனக்கூறி ஆஜராகவில்லை.
இந்நிலையில், டெல்லி ரோஸ்வியூ அவென்யூ நீதிமன்றத்தில் சட்டவிதிகள் 174ன் கீழ் மனு அளித்த அமலாக்கத்துறை கட்டாயம் கெஜ்ரிவால் ஆஜாராகி விளக்கமளிக்க வலியுறுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற மார்ச் 16ஆம் தேதி ஆஜராகும் படி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை தவிர்த்து கெஜ்ரிவாலுக்கு இது நீதிமன்றம் அனுப்பிய 2வது சம்மன் என்பது குறிப்பிடதக்கது.