இயக்குநர் ‘கட்’ சொன்ன பிறகும் அழுகையை நிறுத்த முடியவில்லை - சர்ஃபிரா படப்பிடிப்பு குறித்த மனம் திறந்த அக்ஷய் குமார்!
தந்தை மரணித்த காட்சி படமாக்கப்பட்டபோது இயக்குநர் ‘கட்’ சொன்ன பிறகும் அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை என சூரரைப் போற்று இந்தி ரீமேக்கான சர்ஃபிரா படப்பிடிப்பு குறித்த அக்ஷய் குமார் மனம் திறந்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
கொரோனா முடக்கம் காரணமாக படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பிரிவில் 5 தேசிய விருதுகளை வென்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்காரா இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
உடன் நடிகர்கள் ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ‘சர்ஃபிரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Dream so Big, they call you Crazy! #Sarfira releasing only in cinemas on 12th July, 2024. #MaarUdi pic.twitter.com/9NHKqQN4e3
— Akshay Kumar (@akshaykumar) February 13, 2024
இந்த நிலையில் சர்பிரா படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட அக்ஷய் குமார் இப்படத்தில் இடம்பெற்றுள்ள தந்தையின் மரணம் குறித்து காட்சிகளில் தான் கிளிசரின் போடாமல் நடித்ததாக தெரிவித்துள்ளார். அந்த காட்சியில் தான் நடித்தபோது தனது தந்தையின் மரணம் தனக்கு நினைவுக்கு வந்ததாகவும் இதனால் தான் கிளிசரின் எதுவுமே போடாமல் உண்மையாகவே கதறி அழுததாகவும் பகிர்ந்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர் “ சம்பந்தப்பட்ட காட்சியை நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது, நான் அந்த மனநிலைக்கு சென்றுவிட்டதை உணர்வீர்கள். அந்த காட்சி படமாக்கி முடிந்ததும் படத்தின் இயக்குநர் “சுதா 'கட்' என்று சொன்னார். ஆனால் என்னால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. நான் தொடர்ந்து அழுது கொண்டேதான் இருந்தேன்” என அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.