“டார்கெட் முடிக்க மாட்டியா”... ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய்போல் இழுத்து சென்ற தனியார் நிறுவனம்!
கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் தங்கள் இலக்குகளை அடையத் தவறியதற்காக, ஊழியர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு நாய்கள் போல அழைத்து செல்லப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து விசாரணை நடத்த கேரள தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
கொச்சியின் கலூரில் செயல்படும் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் இந்த செயல் அரங்கேறியுள்ளது. ஆனால் வீடியோவில் துன்புறுத்தப்படுவதாக காட்டப்படும் நபர், நிறுவனத்தில் பணி துன்புறுத்தல் எதுவும் இல்லை என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
"நான் இன்னும் அந்த நிறுவனத்தில்தான் வேலை செய்து வருகிறேன். இந்தக் காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை, அப்போது அந்த நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ஒருவரால் வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டவை. பின்னர் நிர்வாகத்தால் அவர் ராஜினாமா செய்யக் கேட்கப்பட்டார். இப்போது அவர் இந்த வீடியோக்களை பயன்படுத்தி நிறுவனத்தின் உரிமையாளரை அசிங்கப்படுத்த முயற்சிக்கிறார்” என வீடியோவில் இருக்கும் நபர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கேரள கல்வித்துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குளத்தூர் ஜெய்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தது.
இதற்கிடையில், கேரள மாநில இளைஞர் ஆணையமும் தலையிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக தாமாகவே வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில் தண்டனையாக ஊழியர்கள் தங்கள் ஆடைகளை தாங்களே கழற்ற கட்டாயப்படுத்தப்படும் மற்றொரு வீடியோவும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தும் நான்கு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது எனவும் அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.