"கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.36,397 கோடி செலவிடப்பட்டுள்ளது!" - மத்திய அரசு தகவல்!
தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது,
"தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2024 ஜூலை 29ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 220.68 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை 99 நாடுகள் மற்றும் இரண்டு ஐ.நா. அமைப்புகளுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்க சுமாா் ரூ.60 கோடி செலவிடப்பட்டது. கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக கல்வித் துறை மற்றும் தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.533.3 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தடுப்பூசி உற்பத்தியாளா்கள் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க ரூ.158.4 கோடி வழங்கப்பட்டது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாவது.