“சண்டை போட்டுக் கொண்டிருந்த ஊழல்வாதிகள் ஒன்று கூடி எனக்கு எதிராக அவதூறு கூறுகிறார்கள்” - பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!
எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருந்த நாட்டின் ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றுகூடி இன்று தனக்கு எதிராக அவதூறு கூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், பீகார் மாநிலம் ஜமுய் நகரில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த பேரணியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரதமருடன் மேடையில் இருந்தனர். 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வானும், அம்மாநில முதலமைச்சரான நிதிஷ்குமாரும் முதல்முறையாக ஒரே மேடையில் காணப்பட்டனர்.
ஜமுய் நவாடா, முங்கர், பங்கா ஆகியவற்றுடன் சேர்த்து பீகார் மாநிலத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி கணக்கில் எழுத தயாராகி விட்ட பீகார் மக்களின் முடிவுக்கு நான் தலை வணங்குகிறேன். பீகார் முழுவதும் மீண்டும் மோடி அரசு என்று கூறி வருகிறது. நான் உங்கள் மத்தியில் வரும் போதெல்லாம் நீங்கள் எனக்கு மிகுந்த அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள். இன்று நான் ஒரு குறையை உணர்கிறேன். பீகாரின் மகனும், அன்புக்குரியவரும், தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபட்ட எனது சிறந்த நண்பரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான ராம் விலாஸ் ஜி நம்மிடையே இல்லாததால் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் முயற்சியால் பீகாரை பெரும் குழப்பத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. இதில் நம் நிதிஷ்குமார் பெரும் பங்கு வகித்துள்ளார். பீகார் வேகமாக வளர்ச்சியடையும் நேரம் வந்துவிட்டது. ஒருபுறம் காங்கிரஸ், ஆர்ஜேடி போன்ற கட்சிகள் தங்கள் ஆட்சியால், உலகம் முழுவதும் இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறது. மறுபுறம் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி "இந்தியாவை வளர்ச்சியை நோக்கி" கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே இலக்காக மட்டுமே கொண்டுள்ளது.
84 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் பீகாரில் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி விலங்குகள் கால் மற்றும் வாய் நோயிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முன்பு ஏழைகளுக்கு கொடுக்கப்படும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது அது நேரடியாக மக்கள் கணக்கில் வந்து சேருகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் பலனை விவசாயிகள் பெறுகின்றனர். எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருந்த நாட்டின் ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றுகூடி இன்று மோடிக்கு எதிராக அவதூறு கூறுகிறார்கள்”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.