பதிப்புரிமை மீறல் வழக்கு - ஏ.ஆர். ரகுமான் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை!
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசி புதீன் தாஹர் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வரும் ‘வீர ராஜ வீரா’ பாடல் என்பது எனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடல் ஆகும்.
அதனை எங்களின் அனுமதி இல்லாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்தில் பயன்படுத்தி உள்ளார். எனவே அதற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என ஃபயாஸ் வாசி ஃபுதீன் தாஹர் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது.
சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் ‘வீர ராஜ வீரா’ பாடலை இயற்றியுள்ளதாக ஏ.ஆர். ரகுமான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பதை உத்தரவில் பதிவு செய்து, பதிப்புரிமை மீறல் தொடர்பாக 2 கோடி ரூபாய் தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இசையமைப்பாளர ரகுமான், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செலுத்த வேண்டும், 2 லட்ச ரூபாயை தாகருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தாக்கல் செய்த மனு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் அஜய் திக்ப்பால் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிபதிகள் டெல்லி உயர் நீதிமன்ற தனிநீதிபதியின் முந்தைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.