'கூலி' டீசர் விவகாரத்தில் இளையராஜா நோட்டீஸ்: ரஜினிகாந்த் அளித்த பதில் என்ன தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்துக்கு ‘கூலி’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்தின் படபடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த திரைப்பபடத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கூலி டீசரில் இளையராஜா இசையில் உருவான 'வா வா பக்கம் வா' பாடலின் இசையை முறையாக அனுமதி வாங்காமல் அனிருத் பயன்படுத்தியிருப்பதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையாராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இளையாராஜா தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது :
" இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘தங்கமகன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வா வா பக்கம் வா’ பாடலை மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தியுள்ளனர். கூலி திரைப்படத்தில் தனது பாடலை உரிய அனுமதி பெறாமலும், ராயல்டி செலுத்தாமலும் பயன்படுத்தி உள்ளனர். முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும்"
இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : கடனை திருப்பி தராததால் சொந்த மச்சானை கடத்திய மாமன் உள்பட 5 பேர் கைது!
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
"காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புவது இளையராஜாவின் முடிவு. அது தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் உள்ள பிரச்னை. ' கூலி' திரைப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது . 'வேட்டையன்' படப்பிடிப்பு 80% முடிவடைந்துள்ளது"
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.