"மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்" - தமிழ்நாடு அரசு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனையடுத்து ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புப்படுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஷோபா மன்னிப்பு கோரினார். தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான திமுக-வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.