தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1-ம் தேதி வெடிகுண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என தெரிவித்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது. சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிகழ்வு தொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்புக் கோரினார். இந்நிலையில், தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.