தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு... | மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான தி.மு.க.வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம்”என்று நேற்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புப்படுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஷோபா மன்னிப்பு கோரினார்.
இந்தநிலையில் எந்தவித ஆதாரமுமின்றி தமிழர்கள் மீது அவதூறு தெரிவித்த ஷோபா மீது நடவடிக்கை எடுக்கும்படி மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் புகாரளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மதுரை காவல்நிலைய போலீசார், ஷோபா மீது வன்முறையை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், "தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு நீடித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசியது இரு மாநிலங்களுக்கு இடையே வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. இது தேசிய ஒற்றுமையை, இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் விதமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இதுபோன்ற கருத்துக்களை மத்திய இணை அமைச்சர் பேசியிருப்பது நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான தி.மு.க.வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.