சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளர் மஹாவிஷ்ணு கைது - #Saidapet போலீசார் நடவடிக்கை!
சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளரான மஹாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்திருந்தனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் அப்பள்ளியின் மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இச்சம்பவம் கண்டனத்துக்குரியது எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.
பல்வேறு அரசியல் கட்சியினரும் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி குளத்துபாளையம் பகுதியில் மட்டுமே அவரது அறக்கட்டளை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்துக்கு அவிநாசி போலீசார் நேற்று சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதுரையை பூர்வீகமாக கொண்ட மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் இருப்பதும், தமிழ்நாட்டில் அவிநாசி குளத்துப்பாளையம் பகுதியில் தலைமை அலுவலகம் இருப்பதும் தெரியவந்தது.
அவிநாசியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து உணவு தயாரித்து தினந்தோறும் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு நபர்களுக்கு உணவு விநியோகித்து வருகின்றனர். மகாவிஷ்ணுவுக்கான பின்புலம், வருமானம், இவரது யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ பதிவுகள், ஏற்கனவே எங்கெங்கு உரையாற்றி உள்ளார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு சிட்னியில் பயிற்சி வகுப்பு எடுக்க சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
இதன் பின்னர் சிட்னியில் இருந்து விசாரணைக்கு வருவதாக மஹா விஷ்ணு வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார். இதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.