சர்ச்சைப் பேச்சு விவகாரம் | முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனு!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம்போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன்படி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகை கஸ்தூரி 4 சட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீஸார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீஸார் நேற்று சென்றனர். அப்போது நடிகை கஸ்தூரி தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.
இதையும் படியுங்கள் : தொடர் தோல்வியில் இந்திய அணி | சமூக ஊடகங்களில் பரவும் விமர்சனங்களுக்குக் கவுதம் கம்பீர் பதிலடி!
இந்நிலையில் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான நிலையில் கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். காவல்துறையினர் நடவடிக்கை தீவிரம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, தன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.