இந்திய விமானப் படைக்காக ரூ.85 ஆயிரம் கோடியில் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 97 இலகுரக தேஜஸ் ரக போர் விமானங்களும், 6 மேம்பட்ட வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களை ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களின் விலை ரூ.18,000 கோடியாகவும், தேஜாஸ் விமானங்களின் கொள்முதல் விலை ரூ. 67,000 கோடியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக, தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
கடந்த 2021 ம் ஆண்டு பிப்ரவரியில், இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் உடன் ரூ. 48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 97 புதிய தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.